×

வனப்பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டதால் 20 ஆண்டுகளாக நிரம்பாத 117 ஏக்கர் மெகா தடுப்பணை

* தொடர் மழை மாயமானது

*அடர் வனம் உருவாக்க விவசாயிகள் கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அருகே 117 ஏக்கரில் உருவான மெகா தடுப்பணை, 20 ஆண்டுகளாக முழுமையாக நிரம்பாமல் உள்ளது. இதற்கு வனப்பகுதியில் இருந்து மரங்கள் வெட்டப்பட்டதுதான் காரணம் என்று கூறும் இப்பகுதி விவசாயிகள், அடர் வனம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சின்னமனூர் அருகே சின்னஓவுலாபுரம் கிராம ஊராட்சிக்கு அடுத்ததாக வரதராஜபுரம், காமராஜபுரம், பெருமாள்பட்டி, இந்திரா காலனி, எழுவம்பட்டி, ஆதிதிராவிடர் காலனி உள்ளிட்ட 17 உட்கடை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 8 ஆயரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை உள்ளது.
இப்பகுதியில் வாழை, தென்னை, திராட்சை, காய்கறிகள், நிலக்கடலை, உளுந்து, துவரை, கேழ்வரகு, தட்டாம்பயறு, மொச்சை உள்ளிட்ட விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவசாய நிலங்களுக்கு தேவையான பாசன நீர் கிடைப்பதற்கு போர்வெல் மற்றும் கிணறுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் எவ்வித தண்ணீர் பற்றாக்குறையும் இல்லாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள மெகா தடுப்பணை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதன் அடிப்படையில் இப்பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள் தடுப்பணை அல்லது கண்மாய் அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். இதற்காக பெரியகுளம் சோத்துப்பாறை நீர்த்தேக்க திட்டம், மஞ்சளாறு அணை, சின்ன ஓவுலாபுரம் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி சின்ன ஓவுலாபுரத்தில் இருந்து பெருமாள் மலை மற்றுமற் ஹைவேவிஸ் மலையடிவார பகுதிகளின் தொடர் வரிசையில் 5 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் சென்டாக்கட்டி மலைப்பகுதியில் இயற்கை நீரூற்று இருப்பதுடன், மழைக்காலங்களில் அதிக அளவில் நீர்வரத்து இருக்கும் என்பதை அறிந்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறையினர் சென்டாக்கட்டி மலை அடிவாரத்தில் உள்ள பெரிய ஊத்து ஓடை கண்மாயில் உயர்ந்த அளவிலான மெகா தடுப்பணை, அதன் மேற்கு பகுதியில் ஊற்று நீர் வரும் வழியில் ஆறு சிறிய செக்டேம்கள் கட்டலாம் என தீர்மானிக்கப்பட்டது. இதனால் அதிக அளவில் மழை வெள்ளம் மற்றும் ஊற்று நீரை தேக்கி வைக்கலாம் என அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து இப்பணிகளுக்காக மாநில அரசும ரூ.2 கோடி நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க உத்தரவிட்டது. இதன்படி கடந்த 2003ம் ஆண்டு சென்டாக்கட்டி ஊற்றுப்பகுதியில் ஆறு செக்டேம்கள் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து 3.65 மீட்டர் அகலத்தில், 11.23 மீட்டர் உயரம் கொண்ட பெரிய ஊத்து ஓடை கண்மாய் மற்றும் மெகா செக்டேம் 117 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இதில் முழுமையாக தண்ணீரை தேக்கினால், இப்பகுதி விவசாயத்திற்கு மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் தேவையும் நிறைவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெருமாள் மலை மற்றும் ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதிகளில் அதிக அளவில் மரங்கள் ெவட்டப்பட்டன. இதனால் தொடர் மழை மாயமான நிலையில், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை மட்டும் குறைந்த அளவில் பெய்யும் நிலை உருவானது.

இதுபோன்ற சூழ்நிலை காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஊத்து ஓடை கண்மாய் தடுப்பணையில் இதுவரை முழுமையாக தண்ணீர் தேக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியை சுற்றிலும் சுமார் 100 ஏக்கர் வனப்பகுதிகள் இருக்கிறது. இப்பகுதியில் மேலும் அதிக அளவில் மரங்கள் வளர்த்தால் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் எதிரொலியாக இப்பகுதியில் அடர் வனப்பகுதியை உருவாக்கினால் மட்டுமே போதிய மழை பெய்து அதிக தண்ணீர் கிடைத்து சின்னஓவுலாபுரம் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயம் செழிக்கும். ஆண்டுக்கு இரு போகம் நெல் சாகுபடி நடைபெறும். மானாவாரி நிலங்களை வயல்களாக மாற்றலாம் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் விவசாயிகள்.

எனவே இப்பகுதியினை அரசு தரப்பில் ஆய்வு செய்து ஹைவேவிஸ் மற்றும் பெருமாள் மலை, செண்டாக்கட்டி மலைப்பகுதியை அடர் வனப்பகுதியாக மாற்ற வேண்டும். இதன் வாயிலாக தொடர் மழை கிடைத்தால் மட்டுமே. ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டு முழு கொள்ளளவை இதுவரை எட்டாமல் இருக்கும் பெரிய ஊத்து ஓடை கண்மாய் தடுப்பணை நிரம்பும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

The post வனப்பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டதால் 20 ஆண்டுகளாக நிரம்பாத 117 ஏக்கர் மெகா தடுப்பணை appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்